இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைப்பதற்காக உழைக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது' என்று சொன்ன தத்துவமேதை மருத்துவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
அந்நாளில் அவரது வார்த்தைகளின் உண்மையான பொருள் உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத, படிக்க சொல்லித்தருவது மட்டுமல்ல; ஒழுக்கம், உயர்ந்த பண்புகள், சமூக அக்கறை உள்பட மனிதனுக்குத் தேவையான நல்ல குணங்களை மாணவர்கள் மனதில் விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கிறது. அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்து வணங்க சொல்லித்தந்திருக்கிறார்கள்.