சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (டிச.6) சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டுள்ளது குறித்து மத்திய அரசிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடமும் தான் கேட்க வேண்டும்.
நான் அமமுக பொதுச் செயலாளர். இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன். அதிமுகவில் உள்ளவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பில்லை.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்குச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதலில் நிதானமாக உள்ளாரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அமமுகவில் கலியாக உள்ள தலைவர் பதவிகளை அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்பட்டு, அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஜி 20 ஆலோசனைக் கூட்டம்; ஈபிஎஸ்-க்கு அழைப்பு - கொடுக்கப்பட்டதா புது அங்கீகாரம்