புதுச்சேரி: குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, கிழக்குக் கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களின் தொடக்கவிழா மற்றும் அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் இன்று(ஏப்.24) மாலை நடந்தது.
பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்:இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான ரூ.204 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “புண்ணிய பூமியான புதுச்சேரியை வணங்குகிறேன். பாரதி, அரவிந்தரின் கர்ம பூமியாக புதுச்சேரி திகழ்கிறது.
விவிஎஸ் ஐயர், பாரதிதாசன் ஆகியோரை சேவையாற்ற அனுப்பியது. மக்களின் தீர்ப்பால் தான் என்.ஆர்.காங் - பாஜக அரசு செழிப்பாக இருக்கிறது. புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றி விட்டுத்தான் அடுத்த முறை மக்களைச் சந்திக்க வருவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் , புதுச்சேரியில் சூரிய சக்தி மூலம் 26 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் ரங்கசாமி, நமச்சிவாயம் தலைமையில் பிரதமர் மோடி சொன்னது போல பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாகவுள்ளோம். ரூ.6 கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியைப் புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்’ என்றும் தெரிவித்துக்கொண்டார்.