சென்னை:தமிழ் சினிமாவின் ரஜினியின் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஜினியின் 170வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இது ஜெய்பீம் பட இயக்குநர் த.செ ஞானவேல் இயக்க உள்ளதாகக் கூறப்பட்டு 2024ல் வெளியாக உள்ளது என்னும் செய்தி இணையத்தில் பரவி உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த், இவரது படங்கள் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் திருவிழா போல ரசிகர்கள் கூட்டம் படத்தைக் கொண்டாடுவார்கள்.தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் படம் 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். இவரது படங்களில் வரும் டார்க் காமெடி மிகவும் ரசிக்கும் படியாகவும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்கும்.
இதனால், விஜய்யை வைத்து 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார், நெல்சன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படத்தின் சமயத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெயிலர் என்னும் படத்தை இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' (Jailer) படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று வந்தது. ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.