சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எந்த அவசர உதவிக்குத் தேவை என்றாலும் தொடர்புகொள்ளலாம். 108 ஆம்புலன்ஸில் பணிபுரிபவர்களுக்கு மீட்பு பணிக்குத் தேவையான கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நிவர் புயலுக்கு முன்னால் இரண்டு நாள்களும், பின்னர் நான்கு நாள்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள், பாம்பு கடி ஆகியவற்றுக்குத் தேவையான மருந்துகள் 128 கோடி ரூபாய் அளவிற்கு கையிருப்பில் உள்ளன. 108 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு இன்று 1800 அழைப்புகளுக்கு மேல் வந்திருந்தாலும், நிவர் புயல் பாதிப்பு குறித்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.
காவல் துறை, தீயணைப்புத் துறையுடன் தொடர்பில் இருந்து எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறையின் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.
புயல் அதிகம் தாக்கும் என எதிர்பார்க்கக் கூடிய மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள், நிலையான மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ள ஆம்புலன்ஸ்கள் தயார் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் யாரும் இந்த நேரத்தில் பயணம் செய்வதையும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும். நிவாரண முகாம்களில் இருப்பவர்கள், பொது சுகாதாரத் துறை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முகாம்களில் இருப்பவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுசெய்துள்ளோம். கடலோர மாவட்டங்களில் புயல் பாதிப்பின்போது தேவையான உதவிகளை கழிப்பதற்காக 465 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - அச்சத்தில் அடையாறு கரையோர மக்கள்!