தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் நாளுக்குத் தயாராகும் 108! - வாக்குப்பதிவு மையத்தில் மருத்துவ சேவை

சென்னை: தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஜிவிகே இஎம்ஆர்ஐ (GVK-EMRI) 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மேலாண்மை, அவசர ஊர்திகளை வாக்குச் சாவடிகளின் அருகே, குறிப்பாகப் பதற்றம் உள்ள வாக்குச்சாவடிகளில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

108 ambulance service
108 ஆம்புலன்ஸ் சேவை

By

Published : Apr 4, 2021, 8:55 AM IST

கோடை கால வெப்பத்தினால் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல்நலம் குறைவு ஏற்பட்டால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் நலன்...

தமிழ்நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓடுகின்றன. இதையடுத்து தேர்தல் வரும்போதெல்லாம் இந்த அவசர ஊர்திகள் வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உடல்நிலையைக் காக்கும் வண்ணம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்று என நிறுத்தப்படும்.

"தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டியது அவசியமானது என்பதைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்திக்கொண்டே வருகிறது. எனவே, எந்த ஒரு வாக்காளனும் வாக்களிக்க வரும்போது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ சிறு பாதிப்பு அடைந்தால் 108-ஐ தொடர்புகொண்டு மருத்துவ உதவியைப் பெறலாம்" என இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மேலாண்மை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேவைப்பட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்றார்.

தயார் நிலையில் 108 ஆம்புலனஸ்

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையமும் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும், வெளியில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது வயதானவர்கள், நோயுற்றவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரும்போது அதில் வெயில் காரணமாக உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு உதவும்விதமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் வைக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் இல்லாததுபோல், 108 அவசர ஊர்தியின் காத்திருப்பு நேரம் 30 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதனைக் கவனத்தில்கொண்டு தேர்தல் நாளென்று வாக்காளர்கள் தயக்கமின்றி 108-ஐ தொடர்புகொண்டு உடனடி மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் 104 இலவச எண்

வாக்காளர்கள் 104 என்ற இலவச எண்ணையும் தொடர்புகொண்டு மருத்துவ உதவி பற்றிய கேள்வி எழுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வாக்காளர்கள் 1 அல்லது 2 கிமீ நடந்துசென்று வாக்களிக்கும் சூழலும் உள்ளது. இந்த நேரங்களில் வாக்காளர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று உணர்ந்தால், 104-ஐ தொடர்புகொள்ளலாம்.

இந்த அழைப்பு மையத்தில் உள்ள மருத்துவர்கள் வாக்காளர்களின் மருத்துவப் பிரச்னையை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மருத்துவ ஆலோசனை கொடுப்பார்கள்.

இது குறித்து சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வழக்கமாகத் தேர்தல் நடைபெறும் நாளன்று, 108 ஆம்புலன்ஸ் மேலாண்மை ஒரு நெறிமுறையைப் பின்பற்றும். அதன்படி, இந்தத் தேர்தலிலும் அதே நெறிமுறை பின்பற்றப்படும். வாக்காளர்கள் நல்ல உடல் நலத்துடன் வாக்குச்சாவடியை அணுகி வாக்களிக்க வேண்டும் என்பதே நோக்கம்" என்றார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் 503 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அவசர ஊர்திகள் இந்தப் பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நிறுத்தப்படும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details