சென்னை: அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் நேற்று (டிச. 6) அனுசரிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் காவி சட்டை அணிந்தவாறு அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், ‘காவிய தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகம் இருந்தது.
இதற்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை அழைத்து செல்ல முயன்றனர். அதனை மீறி விசிக தொண்டர்கள் சிலர், செருப்பு மற்றும் பாட்டிலை அர்ஜூன் சம்பத் மீது எறிந்தனர். ஆனால் போலீசார், அர்ஜூன் சம்பத்தை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.