சென்னை:அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், இரண்டு துணை ஆய்வாளர் உள்பட ஆறு காவலர்களை ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்து காவல் இணை ஆணையர் மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பூட்டை உடைத்து அலுமினியம், கணினி, மின்விசிறி உள்ளிட்ட பொருள்களை திருடிய வழக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த பாபு மற்றும் 17 சிறுவன் உள்பட ஐந்து பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 7 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் சிறுவன் மட்டும் நீதிமன்ற பிணையில் வெளியான நிலையில், அம்பத்தூர் காவல் நிலையத்தில் மீதம் இருந்த நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் தயாராக இருந்தனர்.