அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்களை சூழ்ந்த வெள்ள நீர் சென்னை:அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது மழை வெள்ளம் மற்றும் அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறிய காரணத்தால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்துள்ளது. கழுத்தளவு உள்ள வெள்ள நீரில் செல்ல முடியாமல், அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பல கோடி ரூபாய் வரை நிறுவனங்களுக்கு நஷ்டம் அடைந்துள்ளதாகவும், தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இயந்திரங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், அம்பத்தூரில் உள்ள பட்டரவாக்கம் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளதாகவும், 2015-இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தை விட தற்போது கடந்த 2 நாள் பெய்த மழை வெள்ளத்தால், இங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் வெள்ளத்தால் மூழ்கடித்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
குறிப்பாக ஆவடி, பருதியட்டு ஏரி வழியாக அயப்பாக்கம் வந்து, பின்பு அம்பத்தூர் ஏரி வந்தடையும் மழை நீர் தற்பொழுது திறந்து விடப்பட்டதால், அம்பத்தூர் எஸ்டேட் வடக்கு பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொளத்தூர் செல்லக்கூடிய வெள்ள நீரும் தற்போது இந்த வழியாக திறந்து விட்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வளவு பெரிய தொழிற்சாலை நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்தாலும், இதுவரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், சிட்கோ நிறுவாகம், தொழிற்சாலை துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அரசுத் துறை அதிகாரிகள் இதில் கவனம் கொண்டு, பாதிப்படைந்த தொழிற்சாலைகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத வெள்ள நீர்.. அவல நிலையில் உள்ள அரும்பாக்கத்தின் கழுகுப்பார்வை காட்சிகள்!