தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி.. - chennai news in tamil

College students fight with Stranger: சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நபரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்;
ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்;

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 3:26 PM IST

ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்;

சென்னை:அம்பத்தூர், மேனாம்பேடு கருக்கு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்து உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று (செப்.20) காலை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு, அப்பகுதிவாசிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர், தனது குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை பார்த்து, சாலையின் ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அசோக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அசோக்கை கல்லூரிக்குள் இழுத்துச் சென்று தலை, முகம், கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளனர். அசோக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய நோய்க்கு ஆஞ்சியோ சிகிச்சைப் பெற்ற நிலையில் அவரை மாணவர்கள் கடுமையாக தாக்கிய நிலையில் அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவ்வழியாக சென்ற டாடா சுமோ வாகனத்தையும் மாணவர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் செண்ற அப்பகுதி வாசிகள், கல்லூரிக்கு முன்பு நின்று கல்லூரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், அம்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக்கை தாக்கிய 7 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் இருந்து இடமாற்றச் சான்றிதழ் (TC- Transfer Certificate) கொடுத்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

அம்பத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே அசோக்கை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நடிகர் பாபி சிம்ஹா, கேஜிஎப் பட வில்லன் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details