மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு! - school
சென்னை: கோடை விடுமுறை முடிந்து வந்த மாணவர்கள், ஆசிரியர்களை மேளதாளம் முழங்க, சகல மரியாதையுடன் முன்னாள் மாணவர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை முகப்பேரில் கிழக்கு மறைமலையடிகளார் சாலையில் அரசினர் ஆண்கள் பள்ளி உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்று (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப்பள்ளியைப் பொறுத்தளவில் இந்த ஆண்டு புதியதாகப் பல குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
கோடை விடுமுறை முடிந்து வரும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை உற்சாகப்படுத்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்-பெற்றோர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மங்கள இசையுடன் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும், பட்டாசு வெடித்து சகல மரியாதையுடன் மாணவர்கள், ஆசிரியர்களை வரவேற்றனர்.