தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை.யில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு! - 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு ரத்து செய்யப்பட்ட எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Allowed central reservation for MTech course this year, MHC order
Allowed central reservation for MTech course this year, MHC order

By

Published : Feb 19, 2021, 10:32 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருவந்தது. இதனை எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், தமிழக அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 விழுக்காடு இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காண போகிறீர்கள் என்றும், இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details