சென்னை: அரசுப்பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேர ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் 2022-23ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது.
2022-23ஆம் ஆண்டின் மருத்துவம்(MBBS) மற்றும் பல் மருத்துவம்(BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவம் பல் மருத்துவம் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவம், பல் மருத்துவம் இடங்கள் சேருவதற்கான 7.5 சதவீதம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 2695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2674 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் 764 பேரும், பெண் விண்ணப்பதாரர்கள் 1910 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவத்திற்கு (MBBS) 459 இடங்களும், பல் மருத்துவத்திற்கு (BDS) 106 இடங்கள் என ஆக மொத்தம் 565 இடங்கள் உள்ளது.