சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது.
எனவே, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதிகளில், அரசு ஊழியர்கள் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், "சொந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து அங்கேயே வாக்களிக்கவும், பிற தொகுதிகள் அல்லது பிற மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகின்றன. அந்த வாக்குச்சீட்டில் ஊழியர்களின் அத்தாட்சியை பெற வேண்டியுள்ளது. அத்தாட்சி பெற்றாலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
2019 மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 ஊழியர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களித்தனர். 37 ஆயிரத்து 712 ஊழியர்கள் வாக்களிக்கவில்லை.
அந்த அரசு ஊழியர்களின் வாக்குகளிலும் 62 ஆயிரத்து 624 வாக்குகள் அத்தாட்சி இல்லை என நிராகரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன. பின்னர், கரோனா தொற்று காரணமாக மேலும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக தேர்தல் பணிகளுக்கு 6 லட்சம் ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது.