சென்னை:கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளரும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலில் பெண்களுக்குச் சவால் அதிகம் உள்ளது. இதற்கு உதாரணம் புரட்சித் தலைவி அம்மா தான். தேமுதிக எந்த லட்சியத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நிறைவேற்றும் முனைப்பில் பயணிப்பேன்.
இதற்குப் பல தடங்களும், பிரச்சனைகளும் வரும். ஆனால், அதைத் தாண்டி நிறைவேற்றுவேன். விஜயகாந்த்தைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதல், தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாக இருந்துள்ளேன். விஜயகாந்த்தின் உடல்நிலை குறைவு என்பதால், தேமுதிக-விற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது உத்தரவின் படி தொடர்ந்து தேமுதிக பயணிக்கும்.
100 ஆண்டுக் கால அனுபவம், 19 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் பெற்ற வலிகள் என்னை வலிமையாக்கி உள்ளது. தேமுதிக பல வெற்றித் தோல்விகளைக் கண்டுள்ள கட்சி. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தோம். ஆனால், 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, கூட்டணி அமைத்து களம் கண்டதால் பல துரோகங்களுக்கு ஆளாக்கப்பட்டோம்.
அதன் பிறகு நடந்தவையால் விஜயகாந்த்-க்கு சறுக்கல் ஏற்பட்டது. அந்த மன உளைச்சலே, அவரது உடல் நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது. இனி வரும் காலத்தில் தேமுதிக வெற்றி வியூகம் வகுக்கும். அண்ணனின் பாதி தான் அண்ணி. அதனால் விஜயகாந்த் மீது கொண்ட அன்புக்குத் தலை வணங்குகிறேன். அதே நேரத்தில் மக்களுக்குப் பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஆதரவு தெரிவிப்பேன்” என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய ரோல் மாடல் என்றால் புரட்சித் தலைவி அம்மாவைத் தான் சொல்லுவேன். அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு நிறையப் பிடிக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எப்போதும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தான். அதே போன்று தான் நானும்.