தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை செய்யபட்டதாக கூறபட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்.. கால்களைக் காண்பிக்கச் சொன்ன நீதிபதி! - ஏழு கிணறு போலீஸ்

Madras High Court: கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான கொலை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்
சென்னை உயர்நீதிமன்றத்தில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:15 PM IST

சென்னை:சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறி ஏழு கிணறு போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நந்த கிஷோர் சந்தக்கின் உறவினரான கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ராதேஷ் ஷியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேர் மீது 2017ஆம் ஆண்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

முதலில் கொலை மிரட்டல் என வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பின்னர் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, மூன்றாவது முறையாக பிரிவில் மாற்றம் செய்த போலீசார், கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்நிலையில், தங்கள் மீதான கொலை வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், நந்த கிஷோர் சந்தக் தனது சித்தப்பா எனவும், தங்களுக்கிடையே குடும்பச் சொத்து பாகப்பிரிவினை பிரச்னைகள் காரணமாகவே புகார் அளித்துள்ளதாகவும், தற்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் ராதேஷ் சியாம் சந்தக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராதேஷ் தரப்பு வழக்கறிஞர், நந்த கிஷோர் சந்தக் கொல்லப்படவில்லை எனவும், அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உள்ள நிலையில், பின்னர் எப்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நந்த கிஷோர் சந்தக்-ஐப் பார்த்து "கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்" என நகைச்சுவையாக கூற, நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையடுத்து, இது போன்ற செயல்கள் காவல் துறையை கேலிக்குள்ளாக்கும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் தன்மையை ஆராயாமல் இயந்திரத் தனமாக செயல்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்டோர் மீதான கொலை வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"இன்னைக்கு ஒரு புடி" - ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா! மழை வேண்டி விடிய விடிய நடந்த கறி விருந்து!

ABOUT THE AUTHOR

...view details