சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழையானது பெய்தது. குறிப்பாக, ஒரு வருடம் பதிவாக வேண்டிய மழை அளவானது, காயல்பட்டினத்தில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கித் தவித்தனர்.
இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் பாதிப்பை தமிழ்நாட்டில் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்நிலையில், தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என்பதைத்தான் வானிலை ஆய்வு மையம் சொன்னது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவைவிட, பல மடங்கு அதிகமாக மழை பெய்தது" என்றார்.
இவரைத்தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், எதிர்பாராத பாதிப்பு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டிருக்கும். 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு தொடங்குவதற்கு முன்பு குறுகியகால இடைவெளியே இருந்தது" என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, திருநெல்வேலியில் நேற்று (டிச.22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை. இந்த வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் செய்வான். மேலும் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். வெளிநாடுகளில் உள்ளதுபோல், ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடியவில்லை? இனிவரும் காலங்களில் இன்னும் அதிக மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில்தான், மக்கள் தங்களை காத்துக்கொள்ள முடியும்" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (டிச.22) காலை டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "சென்னை வானிலை மையம், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து டிச.12ஆம் தேதியே தகவல் கொடுத்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ள மையம், சென்னை வானிலை மையம்.
அந்த மையத்தில் இருந்து தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே, தமிழ்நாடு அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு. வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது. கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவில்லை" என குற்றம்சாட்டியிருந்தார்.