சென்னை: சென்னையில் சிடிஎஸ் நிறுவன கட்டட திட்ட அனுமதிக்காக 12 கோடி ரூபாய் சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அப்போதைய வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்காக காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் சிடிஎஸ் முன்னாள் நிர்வாகிகள், எல் அண்ட் டி கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் என ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (மார்ச்.28) வழக்குப் பதிவு செய்தனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் டெக்னாலஜியின் மிகப்பெரிய அலுவலகங்கள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்டப் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து பார்ச்சுன் இதழின் உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 2011ஆம் ஆண்டு இணைந்தது. அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கட்டடங்களை கட்டுவதற்குத் தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்டப் பல்வேறு ஒப்புதல்களை மாநில அரசிடமிருந்து பெறுவதற்கு மொத்தமாக 26 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்கப் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் அந்நிறுவனத்தின் தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 2019ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் விசாரணை செய்ததில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காக்னிசன்ட் நிறுவன கட்டுமானப் பணி மேற்கொண்டதற்கு இந்திய மதிப்பில் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுக சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் பெற்றுக் கொண்டு காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுஷன் (cognizant technology solutions) நிறுவனத்தை சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்குவதற்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், பெயர் குறிப்பிடாத சிஎம்டிஏ அதிகாரிகள், (சிடிஎஸ்) காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னீசண்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமானப் பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன், முன்னாள் செயல் துணைத்தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமானப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில், 2011 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. விதிப்படி, சிடிஎஸ் நிறுவன அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும். சிடிஎஸ் நிறுவனம் லார்சன் அண்ட் டியூப்ரோ (Larsen and Toubro - L&T) என்ற கட்டுமான நிறுவனம் மூலம் கட்டுமான வேலைகளை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் சிடிஎஸ் நிறுவனம் கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்காக 2013ஆம் ஆண்டு சிஎம்டிஏ அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தது.