சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று திடீரென அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்குச் செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், அதுபோன்ற பதட்டமான சூழல் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்துப் பேசிய அவர், “காய்ச்சல் பாதிப்புகள் எங்கு இருக்கின்றதோ அந்த பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் நேற்றைக்குக் கேரளா மாநிலத்தில் 280 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், கேரள மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை அலுவலர்களோடு பேசியுள்ளார்.
கரோனா தொற்றின் பாதிப்பு என்பது மிதமான பாதிப்பாகவே உள்ளதாகவும், இன்றைய கள நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகி விடுவதாகவும் கேரள மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறினர்” என அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உருமாறிய கரோனா வைரஸ்:
மேலும், கடந்த 1 வாரத்திற்கு மேலாகச் சிங்கப்பூரில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் இருப்பதாக அறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சிங்கப்பூர் தேசிய நிறுவனம் (National Institute of Singapore ) அமைப்பில் உள்ள மருத்துவர்களோடு தொடர்பு கொண்டதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த உருமாறிய வைரஸ் எந்த வகையிலான பாதிப்பை உருவாக்குகிறது என கேட்டு அறிந்ததாக தெரிவித்தார்.