சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தனித்தனியே போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.
ஆளுநராக செயல்படுவதற்கு ரவி தகுதி இல்லாதவராக இருக்கிறார். அவர் அரசியல் சாசனங்கள் அனைத்தையும் மீறி செயல்படுகிறார். சட்டமன்றத்தில் ஏதோ எதிர்க்கட்சி போல கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, இடையில் வெளியே சென்றுள்ளார். நேற்று மத்திய அரசுக்கு மட்டுமே ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் மாநில அரசுக்கு எதிராக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தூண்டி விடுகிறார்.
புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவான சம்பவம். அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைகளை கட்சி சார்பில் பாராட்டுகிறோம். ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது வருத்தத்தையும் வேதனையினையும் அளிக்கிறது. முதலமைச்சர் சொல்லி இருப்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல், கைது நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் எங்கள் எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியை எழுப்பி மதுரையில் வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது, ஒரு செங்கல் கூட இன்னும் கட்டப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். மதுரையைச் சுற்றியுள்ள 10 மாவட்டங்களைத் திரட்டி, வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.