சென்னை:தமிழ்சினிமாவில்உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் கொண்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். தற்போது லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையானது. இளைஞர்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விஜய் நடித்திருப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் தூண்டுதலின் பேரில் சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாகப் பேசி, மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பாக தான் போராட்டங்களை முன்வைத்ததால் படக்குழு பாடலில் புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் என்ற வாசகத்தைப் பதிவிட்டதாக தெரிவித்தார்.