கரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை: ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்
18:38 May 12
கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் தலா 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க 13ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில், தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில், “அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.