தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாட உள்ள நிலையில், தமிழ்நாடு விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் பொங்கல் நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளன.
சென்னை:
சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. சுமார் 4000 மாணவிகள் தாவணி, பட்டு சேலைகள் என பல்வேறு நிறங்களில் பாரம்பரிய உடைகள் அணிந்துகொண்டு விறகு அடுப்பில், அலங்கரிக்கப்பட்ட மண் பானையில் பொங்கல் சமைத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர். கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான உறியடி, முறுக்கு கடித்தல், வடம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
அதேபோல் நாகர்கோவிலில் உள்ள புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கலையொட்டி இன்று கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் கூடி சர்க்கரை பொங்கல் வைத்து அனைவருக்கும் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் பொங்கல் விழாவில் மாணவிகள் ஆடல் பாடல் என கொண்டாட்டங்களில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பொங்கள் வைக்க தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து பொங்கல் பொங்க குலவையிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்த விழாவில் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலை பள்ளியில் மாணவர்கள் பொங்கல் கொண்டாடினர் திண்டுக்கல்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இன்று மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக எம்.வி.எம் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்லூரியில் வண்ணக் கோலமிட்டு, கருப்பு மஞ்சள், தேங்காய், வாழைப்பழம், மாவிலைத் தோரணம் என தமிழ் முறைப்படி கும்மி அடித்து கொண்டாடினர். சாதி சமயங்களைக் கடந்து அனைத்து மதத்தினரும் பொங்கல் பண்டிகையில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் எம்.வி.எம் மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்தனர். பின்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 2500 மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட சமத்துவ சுகாதார பொங்கல் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு மகிழ்ந்தனர். மாணவ-மாணவிகள் சங்க கால பாடல்களுக்கு தாண்டியா என்று அழைக்கப்படும் கோலாட்ட நடனங்களை நாட்டுப்புற கலை பாடல்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காலந்து கொண்டு பொங்கள் கொண்டாடினர்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலிலிருந்து கும்பி பாட்டுக்களுடன் பொங்கல் சீர் கொண்டுவந்து ஒவ்வொரு துறையின் சார்பில் மாணவிகள் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். கோலப்போட்டியில் நாங்களும் மாணவிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாணவர்களும் கோலம் போட்டனர். பழங்காலத்து நாணயங்கள், முன்னோர்கள் பயன்படுத்திய அரிவாள், அம்மி, உலக்கை உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.