சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளன. இந்நிலையில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிவிப்பில், "தமிழகத்துக்குள் தினசரி 2,800, ஆம்னி பேருந்துகள் மூலம் 3,600 சர்வீஸ்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதில், பெரும்பாலும் 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் தேவைக்கு ஏற்றார்போல் அதிகமான சர்வீஸ் இயக்கப்படும்.
இதையும் படிங்க:கூடலூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி கண்காணிப்பு..!
இந்த சூழ்நிலையில் அரசு கோரிக்கை வைத்தால், பயணிகளின் நலன் கருதி, இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பேருந்துகளை, பகல் நேரங்களில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் இடையூறை ஏற்படுத்தும் என கருதி, எனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் கடந்த ஜன. 5ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.