சென்னை: சென்னை தியாகராய நகரில் அகில இந்திய கல்வி பாதுகாப்புக் குழுவின் சார்பில், மொழிப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்தும், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை குழு உறுப்பினர் ஜவகர் நேசன், "மத்திய அரசு ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிராக தென்னிந்திய அளவில் மொழி பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தி திணிப்பிற்கு எதிரான இரண்டாவது மொழிப்போரின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தியை ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இந்தியை திணிக்கின்றனர். அரசியல் வழியாக இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தையும் மாநிலங்கள்தோறும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.