சென்னை:சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்ட படிப்பு படித்துவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவி, உடன் பயிலும் மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பொதுச்செயலாளர் சுகந்தி, "சென்னை ஐஐடியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2017ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பட்ட படிப்பு படித்துவருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் 4 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாதிரீதியாக இழவுபடுத்திய பேராசிரியர்:இந்த விவகாரம் குறித்து மாணவி பேராசிரியரிடம் புகார் அளித்தபோது, மாணவியை சாதிரீதியாக இழவுபடுத்தி, குற்றம்புரிந்தவர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த விவகாரத்தை அணுகி உள்ளார்.
மேலும் இந்தப் பிரச்சினை குறித்து மாணவி, ஐஐடி வளாகத்திலுள்ள உள்புகார் கமிட்டியில் 2020ஆம் ஆண்டு புகார் மனு அளித்தும், ஐஐடி நிறுவனம் மூலம் எந்த சீரான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.