சென்னை:தமிழ்நாட்டின் 2023 -24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.20) தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்த அவர், "அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
எனவே, கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டங்களை கட்டவும் 7,000 கோடி ரூபாய் செலவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அரசுதொடங்கியுள்ளது என்றார். நடப்பாண்டில் 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
எண்ணும் எழுத்தும் திட்டம் நீடிப்பு :எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025 ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும், எண் கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சர்வேத புத்தக்கக் கண்காட்சி : முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
அனைத்துத்துறை பள்ளிகளும் சேர்ப்பு :முதலமைச்சர் தலைமையில் 19.8.2021 மற்றும் 20.4.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும் வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்துப் பணி பயன்களும் பாதுகாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
இதையும் படிங்க: TN Budget 2023 : தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகள்!