பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருவதாகக் கருப்பு எழுத்து கழகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், "பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக சார் பதிவாளர்களாக இருந்த வசந்தகுமார், காளிமுத்து ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2018ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணனை செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம்செய்வதாக அறிவித்தது. இந்த இடமாற்றமானது சட்டவிதிகளுக்குப் புறம்பானது. லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே இடமாறுதல் அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.