சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சுயேட்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமசந்திரன் மட்டுமே நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் .
இரண்டாவது நாளான இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் ஈ டிவி பாரத் செய்திக்காக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த தேர்தலில் முதல் முறையாக பாட்டில் சின்னத்தில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டேன். அதன் பிறகு வரிசையாக தஞ்சாவூர், அம்பத்தூர் மற்றும் ஆர். கே.நகரில் இரண்டு முறை போட்டியிட்டு உள்ளேன்.
மதுக்குடிப்போர் சங்கத்தலைவர் ஆறுமுகம் பேட்டி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேலையில் தேர்தலை ரத்து செய்து விட்டார்கள். இப்பொழுது வரவிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன். மதுவினால் பாதிக்கப்பட்ட குடுமபத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும், அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நான்கு லட்சம் விதவைகள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை அளிக்க வேண்டும். மதுவினால் உயிரிழந்த குடிமகன்களின் பெற்றோர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்பன பல கோரிக்கைகளை மாநில அரசுக்கு முன்வைக்கிறேன்.
மது கடைகள் நல்ல நிலையில் இல்லை. கடைகளில் மதுப்பாட்டில்கள் விலை அதிகம் வைத்து விற்கிறார்கள். இதை அரசாங்கம் சரி செய்யவேண்டும். எங்கள் மது குடிப்போர் சங்கத்தில் உள்ள குடிமகன்கள் குடிப்பதற்கு வீட்டில் இருப்பவர்களிடம் பணம் வாங்குவது மிகவும் கஷ்டம், அப்படி இருக்கும் வேளையில் கடைகளில் கூடுதலாக ஐந்து ருபாய் வைத்து விற்றால் மது வாங்க மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதை தமிழக அரசு கவனத்தில் எடுத்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூர் தொகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்து விடுவேன். நான் இம்முறை வெற்றி பெற்றால் குடிப்பவர்களுக்காகவும் போராடுவேன், குடிசைவாசிகளுக்காகவும் போராடுவேன், என்று வாக்குறுதி அளித்தார்.