சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாள்களாக மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் செய்துவருகிறது. ஆனால், இவற்றை மீறியும் இளைஞர்கள் சிலர் வாகனங்களில் சுற்றிவருகின்றனர். மேலும், பொதுமக்கள் பலர் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்வதாய் பொய் கூறிவிட்டு வெளியே சுற்றிவருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் மக்கள் இனிமேல் ஈடுபட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானே பாடல்களை எழுதி, பாடியுள்ளார் ஆலந்தூர் போக்குவரத்து உதவி ஆய்வாளரான மணி மாறன்.
பாடல் மூலம் விழிப்புணர்வூட்டும் எஸ்ஐ மணி மாறன் இவர் சென்னை ஆலந்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே பாடல் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். சாத்தான்குளத்தில் மனிதாபிமானம் இல்லாமல் இருவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படும் காவலர்களுக்கு மத்தியில் பொதுமக்களின் நலன் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் பாடி வருகிறார் உதவி ஆய்வாளர் மணி மாறன்.