பாஜக நிர்வாகி அமிர் பிரசாத் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி சென்னை:கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் அமைந்திருக்கிறது. அந்த இல்லத்தின் வாயிலில் 50 அடி உயரம் கொண்ட 'பாஜக கொடி கம்பம்' ஆனது அமைக்கப்பட்டது. கொடி கம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து புகார் எழுந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர், அந்த கொடி கம்பத்தை அகற்றுவதற்காக கடந்த கடந்த 21 ஆம் தேதி அங்கு வந்திருந்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த பாஜகவினர் ஒன்று கூடி அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமர் பிரசாத் உள்பட 6 பேர் கைது:அப்போது நெடுஞ்சாலைதுறையினர் கொண்டு வந்த கிரேன் வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தனர். இதனைத் தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறு பேரை கானத்தூர் போலீசார் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நவம்பர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து கானத்தூர் காவல்துறையினர் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, சுரேந்திர குமார், செந்தில் குமார், பால சிவகுமார் ஆகிய நான்கு பேரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி:இதனையடுத்து அமர் பிரசாத் ரெட்டி உட்பட நான்கு பேரையும் கானத்தூர் போலீசார் இன்று (அக்.30) ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த விசாரணையானது, நீதிபதி சந்திர பிரபா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கானத்தூர் போலீசார் ஐந்து நாட்கள் காவல் கேட்டிருந்த நிலையில் நான்கு பேருக்கும் ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி ஆலந்தூர் மேஜிஸ்திரேட் சந்திர பிரபா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவலில் எடுக்கப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உட்பட நான்கு பேரையும் கானத்தூர் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக போலீசார், அமர் பிரசாத் ரெட்டியை அழைத்துச் செல்லும்போது, 'அனைத்தும் பொய் வழக்கு ஒன்றுக்கும் ஆதாரம் இல்லை. பாஜகவை தடுக்க வேண்டும்; பாத யாத்திரையை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. கொடிக்கம்பம் விவகாரத்தின் அன்று நான் வீட்டின் வெளியேவே இல்லை. அண்ணாமலையின் வீட்டின் உள்ளே இருந்தேன்.
போலீசாரை சிசிடிவி காட்சிகளை காட்ட சொல்லுங்கள். எப்போதோ நடந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாய்மையே வெல்லும்' எனக் கூறிவிட்டுச் சென்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஜாமீன் பெற்றும் பலனில்லை.. வேறொரு வழக்கில் கைது.. பாஜகவின் அமர் பிரசாத்திற்கு தொடர் சிக்கல்!