சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அணிவகுப்புடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.
அதையடுத்து ஏ.கே. விஸ்வநாதன் பேசுகையில், "இந்தப் பதக்கங்களை பெறுவதற்கு உங்கள் வாழ்வில் ஒத்துழைப்பு நல்கிய உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் காவல் துறையின் பணி மேலும் சவாலாகவே உள்ளது. காவல் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தினால் மட்டுமே வெற்றிகாண முடியும். அந்தவகையில் சென்னை பெருநகரம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியதற்காகவும் அதேபோல் போக்குவரத்து காவல் துறையில் பணமில்லா அபராதத் தொகை செலுத்தும் முறையை புகுத்தியதற்காகவும் சென்னை பெருநகர காவல் துறைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இரண்டு ஸ்காட்ச் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.