சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்களை மறித்து வாகனங்களின் மீது ஏறி ரசிகர்கள் ஆட்டம் போட்டனர்.
அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடிய சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற அஜித் ரசிகர் லாரியிலிருந்து கீழே குதிக்கும் போது படுகாயமடைந்து பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த பரத்குமாரின் தாயார் லலிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் தனது மகன் உயிரிழந்தது எப்படி என்பது குழப்பம் இருப்பதாகவும், அவ்விடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குழப்பத்தை சரி செய்து, சம்பந்தப்பட்ட வாகனத்தின் மூலம் காப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகாரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பதிவு செய்த வழக்கில் எந்த வாகனத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது என்ற விவரங்கள் இல்லை எனவும், அது குறித்து கேட்டால் நீங்களே விசாரித்து சிசிடிவி கேமராவை கொண்டு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கோயம்பேடு போக்குவரத்து போலீசார் அலைகழிப்பதாகவும் பரத்குமார் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.