இந்தியாவில் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அமைப்புகள், விமான நிலைய ஊழியா்கள், அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
விமான நிலையங்கள் தனியார்மயம்: ஊழியா்கள் போராட்டம்
சென்னை: மத்திய அரசு லாபத்தில் இயங்கும் விமானநிலையங்களைத் தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், மத்திய அரசு கடும் எதிர்ப்புகளையும் மீறி முதற்கட்டமாக திருவனந்தபுரம், மங்களூரு, ஜெய்பூர், அகமதாபாத், லக்னோ, குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதில், மூன்று விமான நிலையங்களைத் பராமரிப்புப் பணிகளுக்காக ஒப்படைக்கும் பொருட்டு, தனியார் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியா்கள் போராட்டங்களை நடத்தினர்.
மத்திய அரசு தனியார்மயக் கொள்கையில் பின்வாங்காமல் தற்போது திருச்சி, இந்தூர், அமிர்தசரஸ், ராய்பூா், வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய ஆறு விமான நிலையங்களைத் தனியார்மயமமாக்க முடிவெடுத்து அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்துள்ள விமான நிலைய ஊழியர் சங்கங்கள் தொர் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். மே மாத இறுதியில் சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் கண்டன போஸ்டர்கள், பேனர்கள் வைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் மாதம் விமான நிலைய நிா்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 30) சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு விமான நிலைய ஊழியர் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.