சென்னை: நங்கநல்லூரை சேர்ந்த ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த மார்ச் 19-ந்தேதி சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்வதாக அவரின் சகோதரியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வராததால் ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் காணாமல் போன தனது சகோதரன் ஜெயந்தனை கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் இருவர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்.