சென்னை:மீனம்பாக்கத்தில் சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தை இயக்குவதற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் 63.92 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பசுமை எரிசக்தியாக சோலார் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்கதாக எரிசக்தியாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படும் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
சென்னை விமான நிலையத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தில் 59 சதவீத மின்சாரம் வெளி நிறுவனங்களிடம் இருந்து சூரிய ஒளி மின்சக்தியாக வாங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி அலகு மூலம் 3 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.
இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து பசுமை மின்கட்டண திட்டத்தின் கீழ் 38 சதவீதம் புதுப்பிக்கத்த எரிசக்தி வாங்கப்படுகிறது. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் நூறு சதவீத மின்சாரமும், கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.