தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 20, 2023, 5:31 PM IST

ETV Bharat / state

கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் பயணிகள்; விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்திய நிறுவனங்கள்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கையும் பல்வேறு விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

Airlines increased flights number of travelers heading abroad for summer vacation has increased
சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

சென்னை:கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் (2020, 2021, 2022) கோடை காலத்தில் விமானசேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கோடைக் காலத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளும் கோடை காலத்தில் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதால் அதிலும் மத்திய, மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால், கரோனா வைரஸ் பாதிப்பு 99.5% கட்டுக்குள் வந்து சுமுக நிலை நிலவுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

3 ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த ஆண்டு கோடைகால சுற்றுலா செல்வதற்காக மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் டிக்கெட்கள் முன்பதிவு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து விமான நிறுவனங்கள் வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், 'லுஃப்தான்சா விமான நிறுவனம், ஜெர்மனின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னைக்கு தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அது மார்ச் மாதத்தில் இருந்து வாரத்தில் 5 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன.

அதைப்போல் ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனம், பாரிஸ் - சென்னை - பாரிஸ் இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வரும் விமான சேவையை வாரத்தில் 5 நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும் அபுதாபி - சென்னை - அபுதாபி இடையே எத்தியட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 விமான சேவைகளை இயக்கி வருகின்றன. அது இனிமேல் 14 விமான சேவைகளாக அதிகரிக்க இருக்கின்றன.

அதைப்போல் ஏர் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம், செயின்ட் டெனிஸ் - சென்னை - செயின் டெனிஸ் இடையே வாரத்தில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வருகிறது. அது இனிமேல், வாரத்தில் இரண்டு நாட்கள் விமான சேவைகளை இயக்க இருக்கின்றது. அதைப்போல் சிங்கப்பூர் - சென்னை - சிங்கப்பூர் இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த பல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டும் ஒரு சேவை இயக்கி வந்தது. அது தற்போது இரவில் 2 சேவைகளும், பகலில் ஒரு சேவையும் ஆக நாள் ஒன்றுக்கு 3 சேவைகளை இயக்கத் தொடங்கி விட்டன.

மேலும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கோலாலம்பூர் - சென்னை - கோலாலம்பூர் இடையே தினமும் இரவில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வந்தது. அது தற்போது பகலில் ஒரு சேவை என்று ஒரு நாளைக்கு 2 சேவைகளாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வருகின்ற மார்ச் 26ஆம் தேதியிலிருந்து சென்னை - அபுதாபி - சென்னை இடையே புதிய சர்வதேச விமானத்தை தினசரி விமானமாக இயக்க இருக்கிறது.

அதைப்போல் சென்னை - மஸ்கட் - சென்னை இடையே மற்றொரு சர்வதேச விமானத்தை தினசரி விமானமாக இயக்கப் போவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 2 புதிய சர்வதேச விமான சேவைகளை அந்த நிறுவனம் தொடங்குகிறது. அதோடு தற்போது லண்டன் - சென்னை - லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அந்த விமான நிறுவனமும் கூடுதல் விமான சேவைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனங்கள் வெளி நாடுகளுக்கு குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய நகரங்களை சென்னையுடன் இணைக்கும் விதத்தில் புதிய வழித்தடங்களில் மேலும் பல விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புதிதாக கூடுதல் விமான சேவைகள் வெகு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 2 கிளிகளால் ரூ.2.5 லட்சம் ஃபைன் கட்டிய ரோபோ சங்கர்.. முழு விபரம்

ABOUT THE AUTHOR

...view details