சென்னை: உலகத்திலேயே மிகப்பெரிய திமிங்கலம் வடிவிலான சரக்கு விமானமான "ஏா்பஸ் பெலுகா" என்ற சரக்கு விமானம், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (ஜூலை 24ஆம் தேதி) இரவு வந்தது. இந்த விமானம் குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பி உள்ளது.
ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனம் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக திமிங்கலம் வடிவில் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" (A300-608ST) என்ற புதிய சரக்கு விமானத்தை 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்தது.
தற்போது இந்த சரக்கு விமானத்தில் ஓரே நேரத்தில் 47,000 கிலோ (47 டன்) எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. அப்படிப்பட்ட இந்த பெரிய ரக சரக்கு விமானம் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தது.
உலகிலேயே மிகப்பெரிய "ஏர்பஸ் பெலுகா" சரக்கு விமானம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி இதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து எரிபொருள் நிரப்பி விட்டு சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டு சென்றது.
இந்த நிலையில் தற்போது ஓராண்டு கழித்து மீண்டும் அதே ஜூலை மாதம் உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான "ஏர் பஸ் பெலுகா" இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்த தகவல், "ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம் சென்னைக்கு வருவது இது இரண்டாவது முறை ஆகும். மேலும் உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து உள்ளது நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது" என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!