சென்னை:நாட்டில் சர்வதேச விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்குத் தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் பயணியிடம் ரூ. 205, சர்வதேச விமானப் பயணியிடம் ரூ.300-ம், விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் பயணிக்கு, விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ரூ.295ஆகவும், சர்வதேச விமானப் பயணிக்கு ரூ.450ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டணம் விமான டிக்கெட்டுடன் இணைத்து வசூலிக்கப்படும். இதன்படி உள்நாட்டு விமானப் பயணிக்கு ரூ. 90ம்; சர்வதேச விமானப் பயணிக்கு ரூ.150ம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர், அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலித்த கட்டணத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும்.