சென்னை:வடசென்னை பகுதியில் உள்ள மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ், தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ், வடசென்னை அனல் மின் நிலையம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட நகரின் அதிக அளவுக்கு காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் காற்று மாசு குறித்த தகவல்களை சென்னை காலநிலை மாற்ற குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை அந்த குழு ஆய்வு செய்ததில் கடந்த 2020ஆம் ஆண்டு, இந்நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறி 50 விழுக்காடு அளவுக்கு மாசு படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதே போல நடத்தப்பட்ட ஆய்வில் 59 விழுக்காடு அளவிற்கு விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டு, இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என இந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்த ஆண்டும் விதியை மீறி காற்று மாசு செய்யப்படுவது தொடர்வதாகவும், இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அமைப்பு புகார் அளித்துள்ளது.
விஷவாயு வெளியிடும் நிறுவனங்கள்
இந்நிறுவனங்கள், மிகப்பெரிய அளவில் நச்சு ஏற்படுத்தும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருவதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இதனால் கருவில் இருக்கும் குழந்தைகள் தொடங்கி, பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், வடசென்னை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள், சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுவது தொடர்கதையாகி வருவதாகவும் அந்த அமைப்பு வேதனை தெரிவித்தது.