சென்னை: நாகரீகம் என்ற பெயரில் இயற்கையில் இருந்து பிரிந்து நெடுந்தூரம் சென்று கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், நேர மேலாண்மை, உபயோகிக்கும் பொருட்கள், கொண்டாடும் பண்டிகைகள் என அனைத்திலும் அதிக அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியும், ஏற்றுக்கொண்டும் பயணித்து வருகிறோம்.
நவீன உலகில் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே சில சமயங்களில் மறந்து சமூகம் இழுக்கும் பக்கமெல்லாம் அதன் போக்கில் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். நம் பெற்றோர் காலத்தில் பயன்படுத்திய மஞ்சப்பையும், தூக்குச் சட்டிகளும் இப்போது நாகரீகமற்றதாக நமக்குத் தெரிகிறது.
பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்து அவற்றைப் பயன்படுத்தி , அதிலும் தரம் குறைந்த எளிதில் மக்காத பிளாஸ்டிக் வகைகளைத் தான் அதிகம் புழங்குகிறோம். அதனை உபயோகித்து விட்டுச் சரியான முறையில் மறு சுழற்சியும் செய்வதில்லை. இவை மண்ணில் புதைந்து மண்ணை மாசுபடுத்துகிறது. சிலர் பொறுப்புணர்ச்சியோடு இருப்பதாக எண்ணி இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடுவதும் உண்டு. இதனால் காற்று மாசும் ஏற்படுகிறது.
தினம் உபயோகிக்கும் பொருட்களால் மட்டுமல்ல, வருடம் ஒரு முறை வரும் பண்டிகைகளும் காற்றை அதிக அளவில் மாசுபடுத்துகிறது. உறவுகளுடன் இனிப்பையும், உணவுகளையும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டாடிய பண்டிகைகள் தற்போது பட்டாசுகளால் காற்று மாசுபாடுகளையும், உடல்நல கோளாறுகளையும் பகிர்ந்து கொள்ளும் பண்டிகைகளாக மாற்றியுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நாம் வாங்கி வெடிக்கும் பட்டாசுகளால் ஏற்படும் அந்த காற்று மாசு பலரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகமாகப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
கடந்த வியாழக்கிழமை டெல்லியில் காற்று மாசுபாட்டால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் மதியம் 2.5 மணிக்குக் காற்று மாசின் அளவு 500 ஆகவும், அதே போல் இரவு 10 மணிக்கு 459 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் கார்பன் மோனாக்சைடு (CO) 85 ஆகவும் NO2 57 ஆகவும் இருந்தது. இந்நிலையில் காலை 9 மணியளவில் காற்றின் தரம் 'திருப்திகரமான' நிலைகளில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) தெரிவித்தது.
காற்று மாசுபாட்டால் கரு வளர்ச்சியில் ஆபத்து:தேசிய தலைநகர் பகுதிகளில் ஏற்படும் இந்த காற்று மாசு நெருக்கடிக்கு மத்தியில் கர்ப்பிணிகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக மாசுபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்வேதா வசீர் கூறியுள்ளார்.
இந்த மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரு வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், இதனால் குறை எடை மற்றும் குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளுக்கு பங்களிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த தொடர் மாசு வெளிப்பாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அளவை அதிகரித்து அவர்களது மன நலனை பாதிப்பதாக வசீர் கூறியுள்ளார். அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது இந்த பிரச்னைகளை சரி செய்தாலும், கர்ப்ப காலத்தில் இதனால் ஏற்படும் தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கிடும் காற்று மாசு:சுற்றுச்சூழல் சுகாதார முன்னோக்குகள் எனும் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சில மாசுபடுத்திகள் அனோஜெனிட்டல் தூரத்தை, அதாவது மகப்பேறுக்கு முந்தைய ஹார்மோன்களின் வெளிப்பாட்டின் அளவில் எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் காற்று மாசுபாடு இயல்பான ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கிடலாம் என்று கூறுகின்றனர். இந்த இடையூறு இனப்பெருக்க ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.