சென்னை: ஐபெட்டோ எனப்படும் தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூலை 26) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிச்சுமை காரணமாக தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கற்பித்தலைக் கடந்து, மாணவர்களின் உயரம், எடை உள்ளிட்டவற்றை அளவு எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அதுவும் ஓராசிரியர் பள்ளிகளாக இருந்தால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பணித்திறன் பயிற்சி என்று வரும்போது, 1, 2, 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் செல்ல வேண்டும், 4, 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் அந்த ஆசிரியரே செல்ல வேண்டும். அதேபோல், 6, 7, 8 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியாக பள்ளி வேலை நாளில் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.
எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் துணைக் கருவிகளை தயாரிப்பதிலேயே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். மாதம்தோறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனை பார்வையிட தொண்டு நிறுவனங்களின் சிறப்பு கருத்தாளர்கள் இருப்பார்கள்.