சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் அதன் திருச்சி கிளை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆன்லைன் மூலமாக ஆறு நாள்களுக்கு குறுகிய கால சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நிதியுதவி அளிக்கும் இந்த சிறப்பு வகுப்பு வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு தொடர்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
விண்வெளி, ஆட்டோமொபைல், கட்டுமானம், நுகர்வோர் மற்றும் தொழில்துறை பொருட்கள் தொழில்களுக்கான வடிவமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு மாறியுள்ளது. எனவே, அதனை மாணவர்களுக்கு விளக்கும் பொருட்டு இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு நாள் பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும், முதல் கட்ட வகுப்புகள் நவம்பர் 23ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட வகுப்புகள் நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி வரையும் நடைபெறும்.