தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' - திமுக, அதிமுகவை வசைபாடிய மருத்துவர்கள் சங்கம் - ஏன் தெரியுமா? - CM MK Stalin

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அதிமுக உருவாக்கிய குழப்பத்தை, திமுக வளர்த்தெடுக்கிறது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதிமுக: உங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படும் - திமுக: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவோம் - தொடரும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு போராட்டம்!
அதிமுக: உங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படும் - திமுக: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவோம் - தொடரும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு போராட்டம்!

By

Published : Jul 1, 2022, 7:04 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் இன்று (ஜூலை 1) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும்பொழுது, தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்களை விட, அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.

எனவே, தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அரசுப்பணியில் சேரும் மருத்துவர்களுக்கு 12ஆவது ஆண்டு நிறைவடைந்தவுடன், ஊதியப்பட்டை 4 வழங்க வேண்டும் என்றக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டம் எனப் பல்வேறு வகையான போராட்டங்களை பல கட்டங்களாக நடத்தினர்.

மு.க.ஸ்டாலின் ஆறுதல்: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. மருத்துவர்களுக்கு துரோகம் செய்ததோடு மட்டுமன்றி, போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய 118 மருத்துவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு இடமாறுதல் செய்து தண்டித்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில், ஃபோக்டா (FOGDA) அமைப்பினர் காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மருத்துவர்களை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவர்களின் உடல் நிலை குறித்து கவலையையும் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால், போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்(தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்). ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், அரசு மருத்துவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அரசு மருத்துவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். விரக்தி அடைந்துள்ளனர்.

எனவே, அரசு மருத்துவர்கள் மீண்டும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழுவினர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடத்தி வருகின்றனர்.

வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக: இந்நிலையில் அரசு அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் சங்கங்களை பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்து, பிளவுபடுத்துகின்றனர். இது சரியான அணுகுமுறை அல்ல. அதிமுக அரசு கடைபிடித்த அதே அணுகுமுறை, இந்த ஆட்சியிலும் தொடர்ந்து விடக்கூடாது. அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

அதைவிடுத்து, கோரிக்கைகள் தொடர்பாக அதிமுக அரசு உருவாக்கிய குழப்பங்களை திமுக அரசும் வளர்த்தெடுப்பது சரியல்ல. மேலும் அது நியாயமல்ல. தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ள பதிவு பெற்ற மருத்துவர்களை, முறைப்படுத்துவதற்கான வரைவு அறிக்கையைக் கொண்டு வந்துள்ளது.

இது இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான அறிக்கையாகும். மருத்துவர்களுக்கும், சிறிய மருத்துவமனைகளுக்கும், ஏழை எளிய மக்களின் நலன்களுக்கும் எதிரானது.

கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சாதகமானது. எனவே, அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, புதிய வரைவு அறிக்கையை அனைவரின் கருத்துகளையும் அறிந்து தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்க வேண்டும்” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் பிஏ4, பிஏ5 வகை ஒமைக்ரான் தொற்றுகள்!

ABOUT THE AUTHOR

...view details