தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2019, 3:01 PM IST

ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான சூழலில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

அதிமுக

உள்ளாட்சித் தேர்தல் வேலைகளை தேர்தல் ஆணையம் ஒருபுறம் மும்முரமாக செயல்படுத்திக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அரசியல் கட்சிகளும் தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாளை (24ஆம் தேதி), அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், பூந்தமல்லி ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்க இருக்கிறது.

செயற்குழுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 370 பேரும், பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள், அவைத்தலைவர் உட்பட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிச் செயலாளர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர். இவர்களைத் தவிர, சிறப்பு அழைப்பாளர்களாக, சார்பு அணி நிர்வாகிகள், தலைமைக்கழக பேச்சாளர்கள், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகளுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய தலைமைப் பதவிகள் உருவாக்கப்பட்டப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்பதால் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், சீனப் பிரதமர் வருகையின்போது ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதேபோல், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கபடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தன்மானத்தை விட்டுக்கொடுத்த கட்சி அதிமுக - அழகிரி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details