சென்னை :தமிழ்நாட்டில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உறுப்பினர்கள் விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில்,”தமிழ்நாட்டில் 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோருபவர்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.