சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 177-ல், 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச்சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
சட்ட வழிகளை எளிதாக்கிய மத்திய அரசு:இரண்டாவது வாக்குறுதியைப் பொறுத்தவரை, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்கால சான்றிதழாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இதனால் ஆயுட்கால தகுதிச் சான்றிதழ் குறித்து சட்ட வழி வகைகளை ஆராயும் பணி தமிழ்நாடு அரசுக்கு இல்லாமல் போனது.
அதே சமயத்தில், முதல் வாக்குறுதியான ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த போதும் நிறைவேற்றப்படவில்லை.
ஆசிரியர்கள் பக்கம் நின்ற ஸ்டாலின்:இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி விட்டனர். மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த வாக்குறுதியைக் கூட தி.மு.க அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தாமாக முன் வந்து ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.