சென்னை:அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
பின்னர் அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், எப்படி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவிக்கு உரிமை கோர முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்வது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அதிமுகவின் உறுப்பினர்களே இல்லாதவர்கள் வழக்கு தொடுத்துள்ளார் என இபிஎஸ் தரப்பின் வாதத்தை ஏற்று தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.