சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பிப்.20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதன் காரணமாகவே, அடுத்த கட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் பிப்.20ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 'இரட்டைஇலை சின்னம்' எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்கப்பட்டது என்பது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. பொதுக்குழு மூலம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஈபிஎஸ் அணியினர் தேர்வு செய்தனர்.
இதே போன்று பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் நியமனமும் செல்லும் என்று அவரது தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை கூட தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்.20ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பினர் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.