சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்ததால், முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு போன்ற சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் வீடுகளில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை வெளியில் யாரும் பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது.
முதலமைச்சர் வேட்பாளர் யார்?
இந்த பரபரப்பான சூழலில் கட்சியில் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவிப்பதென்றால் அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்படி செப்.28ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பெரும் விவாதம் ஏற்பட்டது.
ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் நேருக்கு நேராகவே காரசாரமாக வாதிட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக இருதரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இரவு வரை ஆலோசனை
நேற்று முன்தினம் இரவு தேனியிலிருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ்ஸுடன் இரவே அதிமுக நிர்வாகிகள் பலர் ஆலோசனை மேற்கொண்டனர். 11 பேர் கொண்ட குழு அமைத்தல், முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு வேண்டுமென்பதில் பின்வாங்காமல் ஓபிஎஸ் தீர்க்கமாக இருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று (அக்.6) காலை முதல் ஓபிஎஸ் வீட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதேபோன்று ஈபிஎஸ் வீட்டில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் நேற்று காலை 11.30 மணியளவில் துணை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வழிகாட்டுதல் குழு குறித்தும், அதில் இடம்பெறுவோர் குறித்தும் பேசியதாக தெரிகிறது. இரவு 7.30 மணிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
நேற்று இரவு வரை நடந்த ஆலோசனையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருதரப்பினரின் கருத்துக்களும் இறுதி செய்யப்பட்டு வழிகாட்டுதல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (அக்.7) காலை ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் இணைந்து வழிகாட்டுதல் குழு, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்க தயாராகினர். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு பலகை, தோரணங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
வழிகாட்டுதல் குழு அமைப்பு
இன்று (அக்.7) காலை 9 மணிக்கு அதிமுக தலைமைச் அலுவலகத்திற்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, வழிகாட்டுதல் குழு அமைக்கவும், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பது குறித்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி 11 பேர் கொண்ட குழு பெயரை அறிவித்தார்.
11 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றவர்கள்
திண்டுக்கல் சீனிவாசன்
தங்கமணி
எஸ்.பி. வேலுமணி